ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் அடுத்த மாதம் செல்லவுள்ளார்.
தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு பிரஹலாத் படேல் அளித்த பேட்டி: சுற்றுலாத் துறை அமைச்சக அதிகாரிகள் 2 பேரை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பியுள்ளேன். செப்டம்பரில் நான் அங்கு செல்லவுள்ளேன். முதலில் லேவுக்கும், பின்னர் ஜம்மு-காஷ்மீருக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளேன்.
முக்கியமான சுற்றுலாப் பகுதிகளிலல் ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகளை காஷ்மீருக்கு வரவைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 6 மாத காலம் சுற்றுலா வழிகாட்டியாகத் திகழ ஆன்லைனில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். முடிவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில் சேர்ந்து படிக்க ரூ.2,000 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்று பிரஹலாத் படேல் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன், ஜம்மு-காஷ்மீர், லே பிராந்தியங்களை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இதனிடையே, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சகத்தின் 6 பேர் கொண்ட குழு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை 2 நாள் பயணமாக வந்தது.