புதுதில்லி

கார் வாங்க தில்லிக்கு வந்த தமிழர் இருவரைக் கடத்தி கொள்ளை: இணையதளம் விளம்பரத்தால் நேர்ந்த விபரீதம்

28th Aug 2019 07:57 AM

ADVERTISEMENT

இணையதளம் மூலம் வந்த விளம்பரத்தைப் பார்த்து கார் வாங்க தில்லிக்கு வந்த தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மகனை ஹரியாணாவுக்கு கடத்திய கும்பல், அவர்களிடம் மிரட்டி பணம், நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இணையதளத்தில் இனோவா கிரிஸ்டல் கார் ரூ. 8 லட்சத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தைப் பார்த்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரும்புப் பொருள் விற்பனையாளர் முனியப்பன் (49), அவரது மகன் வாசு (22) ஆகியோர் தில்லிக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை வந்துள்ளனர்.
முன்னதாக அந்த விளம்பரத்தை அளித்தவர்களிடம்  இருவரும் பேசியுள்ளனர். இதன் அடிப்படையில், தில்லி விமான நிலையத்தில் விளம்பரதாரர்கள் அனுப்பிய காரில் இருவரும் எறி, ஹரியாணா நுஹு மாவட்டத்தில் உள்ள மண்டி கெஹரா பெட்ரோல் விற்பனை நிலையம் வரை சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு காரில் மதியம் 2.30 மணிக்கு ஏறிய அவர்களிடம் இனோவா காரின் உரிமையாளர் என்று சிலர் அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்றவுடன் 7 பேர் கொண்ட கும்பல் காருக்குள் புகுந்து இருவரிடம் இருந்த செல்லிடப்பேசி, கைக்கடிகாரம், தங்க மோதிரம், ரூ. 10 ஆயிரம், கையெழுத்திட்ட இரண்டு காசோலை ஆகியவற்றை பறித்துக் கொண்டுள்ளது. 
மேலும் பணத்தைக் கேட்டு அந்தக் கும்பல் இருவரையும் தொந்தரவு செய்யவே, தமிழகத்தில் உள்ள தனது நண்பரிடம் கேட்டு ரூ. 50 ஆயிரத்தை, ரூ. 20, ரூ. 30 ஆயிரமாக  முனியப்பன் அளித்துள்ளார். இதையடுத்து, அந்தக் கும்பல் இருவரையும் மண்டி கெஹரா பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து இறக்கிவிட்டு சென்றுள்ளது. இதையடுத்து, தில்லிக்கு வந்த முனியப்பன், வாசு போலீஸில் புகார் அளித்ததையடுத்து, கொள்ளைக் கும்பலை தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT