புதுதில்லி

உணவக உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயற்சி: இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

28th Aug 2019 07:55 AM

ADVERTISEMENT

தில்லியில் உணவக உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சத்தைப் பறிக்க முயன்றதாக இரண்டு சிறார்கள் உள்பட 3 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் (புறநகர் வடக்கு) துணை ஆணையர் கெளரவ் சர்மா கூறியதாவது: கடந்த ஜூலை 18-ஆம் தேதி பவானா பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். அதில், தன்னிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு சிலர் தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதாகவும், அந்தத் தொகையை தர மறுத்தால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். 
அவர் பணம் தர மறுத்துவிட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அவரது உணவகத்தின் முன் யாரோ ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு சில மணி நேரத்திற்கு முன் வழிப்பறி செய்யப்பட்ட செல்லிடப்பேசியில் இருந்து அவருக்கு அழைப்பு போயிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. இந்நிலையில், ஜூலை 20-ஆம் தேதி உணவகத்தின் உரிமையாளர் வீடு மற்றும் உணவகத்தின் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டார். 
மேலும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி உணவக உரிமையாளருக்கு மீண்டும் அதே நபர்களிடமிருந்து மிரட்டல் அழைப்பு வந்தது. இது தொடர்பாக அவர் போலீஸில் மீண்டும் புகார் அளித்தார். 
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் உருவப் படங்கள் தயாரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, உணவக உரிமையாளர் வசிக்கும் பகுதியில் முன்பின் தெரியாத சில இளைஞர்களுடன் பர்மோத் என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.
இதன் பிறகு, ரோஹிணி செக்டார் 18-இல் ரிதம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புகார் அளித்த உணவக உரிமையாளர் வீடு மற்றும் கடைப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டது அவர்தான் என்றும், உணவக உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததும் அவர்தான் என்பதும் தெரிய வந்தது. 
அவர் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகளான இரு சிறார் பிடிபட்டனர். உணவக உரிமையாளர் வீட்டுக்கு எதிர்ப் பகுதியில் வசித்து வரும் பர்மோத், மிரட்டிப் பணம் பறிப்பதற்கான சதித் திட்டத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதனால், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, தோட்டா, மோட்டார்சைக்கிள், 2 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அந்த அதிகாரி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT