புதுதில்லி

ரவிதாஸர் கோயிலை மீண்டும் கட்டக் கோரி நாளை முதல் தொடர் போராட்டம்: தலித் அமைப்புகள் அறிவிப்பு

27th Aug 2019 08:20 AM

ADVERTISEMENT

தில்லி துக்ளாபாத்தில் இடிக்கப்பட்ட ரவிதாஸர் கோயிலை மீண்டும் கட்ட வலியுறுத்தி தில்லியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) முதல் 3 மாதங்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தலித் அமைப்புகள் அறிவித்துள்ளன.
வட இந்தியாவைச் சேர்ந்த துறவி குரு ரவிதாஸர் ஆவார். 15-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரபலமாக இருந்த பக்தி மார்க்கத்தின் முக்கியத் துறவிகளில் இவரும் ஒருவராவார். சமூக, மத சீர்திருத்தவாதியாக இருந்த இவர், பஞ்சாப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். வட இந்தியாவில் இவரை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கின்றனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் இவரை தெய்வமாக வணங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தில்லி துக்ளகாபாத்தில் உள்ள 15 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குரு ரவிதாஸர் கோயில் ஒன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தில்லி வளர்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) அண்மையில் இடிக்கப்பட்டது. இதற்கு தில்லி, பஞ்சாபில் எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் பரஸ்பரம் குற்றம்சாட்டின.
கடந்த 21- ஆம் தேதி  தில்லியில் தலித் அமைப்புகள் மாபெரும் கண்டன பேரணி நடத்தின. "அகில பாரதிய சந்த் சிரோமணி குரு ரவிதாஸ் மந்திர் சன்யுக்தா சன்ரக்ஷன் சமிதி' என்ற பெயரில் அனைத்து தலித் அமைப்புகளும் இணைந்து இப்பேரணியை நடத்தின.
இந்நிலையில், ரவிதாஸர் கோயிலை 3 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் வரும் புதன்கிழமை முதல் 3 மாதங்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அகில பாரதிய சந்த் சிரோமணி குரு ரவிதாஸ் மந்திர் சன்யுக்தா சன்ரக்ஷன் சமிதி அறிவித்துள்ளது.
 இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அசோக் பாரதி கூறியதாவது: 
ரவிதாஸர் கோயிலை இருந்த இடத்தில் மீண்டும் கட்டுவதற்கான நீண்ட போராட்டத்துக்கு தலித் மக்கள் தயாராகியுள்ளனர். கடந்த 500 ஆண்டுகளாக எந்த இடத்தில் ரவிதாஸர் கோயில் இருந்ததோ, அதே இடத்தில் அக்கோயிலை மீண்டும் கட்ட வலியுறுத்தி, இந்த தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ரவிதாஸர் கோயில் கட்டுவதற்கான இறுதித் தேதியாக வரும் நவம்பர் மாதம் 26 -ஆம் தேதியை கெடுவாக மத்திய அரசுக்கு விதித்துள்ளோம். அதுவரையான 3 மாத காலமும் தலித் அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இப்போராட்டம் வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்கப்படவுள்ளது. மேலும், தில்லியில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 96 தலித் இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரியும் போராட்டம் நடத்தப்படும். ரவிதாஸர் கோயிலை மீண்டும் கட்டுவதில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. தில்லி அரசோ, ரவிதாஸர் கோயிலை மீண்டும் கட்ட வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அப்படியென்றால், இக்கோயிலை மீண்டும் கட்டுவதில் ஏன் தாமதம் நிலவுகிறது என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT