புதுதில்லி

போலீஸ் என்கவுன்ட்டரில் தேடப்பட்ட இருவர் கைது

23rd Aug 2019 07:45 AM

ADVERTISEMENT

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவர், வெவ்வேறு இடங்களில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பேந்திரா. இவர் மீது காஜியாபாத், மீரட் மாவட்டங்களில் 8 குற்ற வழக்குகள் உள்ளன. இவரைக் கண்டுபிடித்துத் தர உதவுவோருக்கு ரூ.25,000 வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், காஜியாபாத் பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த மோட்டார்சைக்கிளை போலீஸார் நிறுத்தினர்.
ஆனால், அதில் வந்தவர்கள் மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களை விரட்டிச் சென்றனர். அந்தச் சமயத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் புஷ்பேந்திராவும் காவலர் விபினும் காயமடைந்தனர். இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் புஷ்பேந்திரா கைது செய்ய்பட்டார். அவரது கூட்டாளி தப்பிச் சென்றார்.
மற்றொரு சம்பவம்: இதேபோன்று விஜய்நகரில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மனோஜ் என்பவர் கைது செய்ய்பட்டார். விஜய் நகரில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் நிறுத்தினர். அந்தக் காரில் 4 பேர் இருந்தனர். அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றதுடன், போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து, போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் தில்லி கோவிந்த் புரியைச் சேர்ந்த மனோஜ் காயமடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் மூவரும் தப்பிச் சென்றனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மனோஜை கண்டுபிடித்துத் தர உதவுவோருக்கு ரூ.25,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அந்த அதிகாரி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT