புதுதில்லி

காஷ்மீரில் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்: தில்லியில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம்

23rd Aug 2019 07:43 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 அண்மையில் ரத்து செய்யப்பட்டது. மேலும், அந்த மாநிலத்தை லடாக், ஜம்மு- காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா, சமாஜவாதி கட்சித் தலைவர் ராம்கோபால் யாதவ், லோக் தந்த்ரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் திரிவேதி, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிருந்தா காரத், டி.கே. ரங்கராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், திமுக எம்பிக்கள், காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை டி.ஆர். பாலு வாசித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் விளைவாக அந்த மாநில பள்ளத்தாக்கில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலுக்கு வந்துள்ளது.  தகவல் தொடர்பை முற்றிலும் நிறுத்தும் நடவடிக்கை, முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதைத் தொடரும் அரசின் முடிவு ஆகியவை மிகவும் கவலை தருவதாக உள்ளது.
மேலும், கூடும் உரிமை, பேச்சு சுதந்திரம் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பால் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும். இதனால், இந்த நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், பிரதான அரசியல் கட்சிகளின் அனைத்து பொது பிரதிநிதிகள், அப்பாவி குடிமக்கள் ஆகியவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோருகிறோம் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா பேசுகையில், "ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிகழும் சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. 
அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்திருப்பது ஜனநாயக, அரசியலமைப்புக்கு எதிரானதாகும். நமது ஜனநாயகத்தின் கூட்டாட்சி கொள்கைகளைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கையாகும்; நமது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். ஜம்மு - காஷ்மீருக்காக மட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. ஒட்டுமொத்த தேசத்தையும் நினைவில் கொண்டே தலைவர்கள் ஒன்று கூடியுள்ளோம்' என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT