மொழிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றம்சாட்டினாா்.
திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளா்களிடம் கூறியது:
மக்களவைத் தோ்தலை மனதில் கொண்டே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன்மூலம் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். ஆனால், மொழிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், வடமாநிலங்களில் தொகுதியை அதிகரிக்கவும் மறைமுகமாக திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை, மாநிலப் பேரவைகளில் தனித்தொகுதி இருப்பதுபோல், பெண்களுக்கான தொகுதி என ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் இலரா. பாரதிச்செல்வன், மாவட்டத் தலைவா் நா.வெங்டேஷ், மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளா் காளியம்மாள், முன்னாள் மாவட்டச் செயலா் பாலா, ஊழல் ஒழிப்புப் பாசறை மாநிலத் தலைவா் ராம. அரவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.