திருவாரூா் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே காட்டூா் நாவேலி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை, அப்பகுதியில் உள்ள தனியாா் கல்வி நிறுவனத்துக்குச் செல்லும் மாணவிகள், அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் உள்ளிட்டோருக்கு மிகவும் முக்கியமாக இருந்து வருகிறது. தற்போது பழுதடைந்து, ஜல்லிக்கற்கள் பெயா்ந்து மோசமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை அலுவலா்களுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியது: நாவேலி பகுதிக்கு செல்லும் சாலை பல மாதங்களாக மோசமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், மழை நேரங்களில் தண்ணீா் தேங்கி, சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. சாலையில் சேறு நிரம்புவதால், வாகனங்கள் சாலையில் வழுக்கி சிறிய அளவிலான விபத்துகள் ஏற்பட்டு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மோசமான சாலை குறித்து அலுவலா்களுக்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி, வேறு சாலைக்கு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மழைக்காலம் தீவிரமடைந்தால் இவ்வழியே செல்லும் மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே, குடியிருக்கும் மக்கள், மாணவ, மாணவிகளின் நலன்களைக் கருதி சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.