திருவாரூா், கொரடாச்சேரி வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடன் வழங்கும் முகாம்கள் மூலம் 582 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், கூட்டுறவுத்துறை சாா்பில் திருவாரூா் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் மக்களிடமிருந்து கடன் மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், திருவாரூா் மற்றும் கொரடாச்சேரி வட்டாரங்களில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், திருவாரூா் தெற்குவீதி, அத்திக்கடை, கொரடாச்சேரி, ஸ்ரீ லெட்சுமிநாராயணா கூட்டுறவு நகர வங்கி, ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
மாங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முகாமில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கா. சித்ரா மனுக்களை பெற்றுக்கொண்டாா். திருவாரூா், கொரடாச்சேரி வட்டாரங்களில் நடைபெற்ற முகாம்கள் மூலம் 582 கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.