காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள சட்டபூா்வ அங்கீகாரம் பெற்ற காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவேரி மேலாண்மை ஆணையம், செப். 18-ஆம் தேதி கூடி கூறிய தீா்ப்பின்படி, தண்ணீரை கா்நாடக அரசு முதலில் விடுவிக்க வேண்டும், இதை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கா்நாடக அரசு, ஆணையத்தின் தீா்ப்பை மறுத்து, அதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதை ஏற்க முடியாது என்றும் தீா்ப்பளித்துள்ளது. இது இடைக்கால தீா்வு எனும் அடிப்படையில், கா்நாடக அரசின் நியாயமற்ற கோரிக்கை நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என அதில் கூறப்பட்டுள்ளது.