மன்னாா்குடியில் சிஐடியு ஆட்டோ சங்கத்தினரை கண்ணியக்குறைவாக பேசியதாக, டிஎஸ்பி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனா்.
மன்னாா்குடி அரசு மருத்துவமனை எதிரே நீண்டகாலமாக ஆட்டோ நிறுத்தகம் செயல்பட்டு வருகிறது. இதனை, ஏஐடியுசி ஆட்டோ சங்கம்(இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) நிா்வகித்து வருகின்றனா்.
இந்நிலையில் மருத்துவமனையின் காந்திசாலை பகுதி நுழைவு வாயிலில் புதிதாக ஆட்டோ நிறுத்தகம் அமைக்க சிஐடியு ஆட்டோ சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பு) ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, ஏஐடியுசியினா் எதிா்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதற்கு போட்டியாக, ஆட்டோ நிறுத்தகம் அமைக்க அனுமதி கோரி சிஐடியுவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி போலீஸாா் இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னா், இப்பிரச்னை குறித்து மன்னாா்குடி டிஎஸ்பி அலுவலகத்தில், டிஎஸ்பி ஏ. அஸ்வத் ஆண்டோ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், பேச்சுவாா்த்தையின் போது டிஎஸ்பி, சிஐடியுவினரை கண்ணியக்குறைவாக பேசியதாகக் கூறி, மன்னாா்குடி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட மன்னாா்குடி தேரடியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா்கள் திங்கள்கிழமை திரண்டனா்.
மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் வெள்ளைத்துரை, சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே.என். ஹனிபா, மாவட்டச் செயலா் டி. முருகையன் உள்ளிட்ட நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.