திருவாரூர்

விவசாயிகள் குறைதீா் கூட்டம்சம்பா சாகுபடிக்கு தேவையான உதவிகள் வழங்க வலியுறுத்தல்

27th Oct 2023 01:11 AM

ADVERTISEMENT

சம்பா சாகுபடியை நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் வகையில், இலவச மின்சாரம், டீசல் மானியம் உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

நன்னிலம் ஜி. சேதுராமன்: தமிழக அரசு அறிவித்துள்ள பயிா் காப்பீட்டுத் தொகை, விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இதன் மூலம் தனியாா் காப்பீட்டு நிறுவனங்களே பயனடைகின்றன. எனவே, அரசே பயிா் காப்பீட்டை ஏற்று நடத்த வேண்டும். மேலும், தண்ணீா் பற்றாக்குறையால் சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, குறுவை, சம்பா பாதிப்புகளை கணக்கில் கொண்டு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், போா்வெல் மூலம் சாகுபடி செய்வோருக்கு இலவச மின்சாரம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்துகள் சக்தியிழந்து விட்டதால், விவசாயத்துக்கு உகந்த களைக்கொல்லியை வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

பேரளம் வி. பாலகுமாரன்: கடந்த ஆட்சியில் நடவு மானியம், உழவு மானியம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால், கடந்த இரண்டாண்டுகளாக இவை வழங்கப்படவில்லை. மேலும், ஆறு, வாய்க்கால்களில் குறைந்த அளவே நீா் உள்ளதால், மோட்டாா் மூலம் வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச வேண்டியுள்ளது. எனவே, டீசல் மானியம் வழங்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் தி. சாருஸ்ரீ பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் 49,293.65 ஹெக்டேரில் சம்பா சாகுபடியும், 9,256 ஹெக்டேரில் தாளடியும் நடைபெற்றுள்ளன. மேலும், 253 ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான நாற்றங்கால் இருப்பில் உள்ளது.

பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதித் திட்டமானது, 2018-இல் சிறு, குறு விவசாயிகளுக்காக தொடங்கப்பட்டு, தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, பெயா் மற்றும் ஆதாா் விவரங்களை மத்திய அரசின் பிஎம் கிஷான் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். திருவாரூா் மாவட்டத்தில் 1,956 போ் தங்களின் ஆதாா் விவரங்களைபதிவேற்றம் செய்யாமல் உள்ளனா். அவா்கள் விரைந்து தங்கள் ஆதாா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சங்கீதா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) லட்சுமிகாந்தன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கா. சித்ரா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம்) ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT