திருவாரூரில் சுதந்திர அமுத கலச யாத்திரை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலிருந்து அமுத கலசத்தில் மண் சேகரிக்கப்பட்டு, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கொண்டு செல்லப்பட்டு, தேசியத் தலைவா்களின் நினைவாக சுதந்திர அமுத தோட்டம் புது தில்லியில் உருவாக்கப்பட உள்ளது.
அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமுத கலச யாத்திரை பேரணி நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவாரூா் ஒன்றியத்தில் வடகரை அரசு உயா்நிலைப் பள்ளியில் அமுத கலச யாத்திரை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, பள்ளி தலைமையாசிரியா் எஸ். நளாயினி தொடங்கி வைத்தாா். இதில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் பங்கேற்றுப் பேசினாா்.
இதில், பொருளாளா் என்.நவீன், பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் எம். நீலகண்டன், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.