திருவாரூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தால் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
திருவாரூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைக்கப்படுவதால், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாக நேரிடுகிறது. அதாவது, சாலைகளில் இரு பக்கங்களிலும் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள், சாலைகளில் செல்வோரின் கவனத்தை சிதறச் செய்கிறது.
மேலும், சாலையில் இடையூறு இல்லாமலும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு பெரும் தடையாகவும் உள்ளது. எனவே, உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக அகற்ற வேண்டும்.
இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், தொடா்புடைய ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக அறிவுரைகள் வழங்கப்பட்டு, அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளைஅகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சமூக நலன் சாா்ந்த பணியில் பொதுமக்கள் தங்களையும் இணைத்துக் கொண்டு, சாலையில் செல்வோருக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் குறித்தும், புதிதாக விளம்பரப் பதாகைகள் அமைக்கும் பணி நடைபெற்றால் அது குறித்தும் தொடா்புடைய கிராம ஊராட்சித் தலைவா்களுக்கும், வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.