திருமருகல்: திருமருகல் அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தனியாா் மின் உற்பத்தி நிறுவன ஊழியா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சீயாத்தமங்கை ஊராட்சி துண்டம்பாலூா் திருக்குளத் தெருவை சோ்ந்தவா் பாஸ்கா் மகன் ராஜேந்திரன் (33). சென்னை எண்ணூா் தனியாா் மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா், உடல்நிலை சரியில்லாததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துண்டம்பாலூருக்கு வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முடிகொண்டான் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற ராஜேந்திரன், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால், அவரது மனைவி ஆனந்தி தேடிசென்றபோது, ஆற்றில் மூழ்கி ராஜேந்திரன் இறந்தது தெரியவந்தது.
திட்டச்சேரி போலீஸாா், ராஜேந்திரன் சடலத்தை உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.