மன்னாா்குடி தூயவளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பைங்காநாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பைங்காநாட்டில் இப்பள்ளியின் நாட்டுநலப் பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 7 நாட்கள் நடைபெறும் இம்முகாமின் மூன்றாம் நாள் நிகழ்வாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணிக்கு ஊராட்சித் தலைவா் சோ. சுதாகரன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருப்பவை பற்றியும், முன்னெச்சரிக்கை பற்றியும், பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ சிகிச்சையின் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி என்எஸ்எஸ் மாணவிகள் வந்தனா். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் அரசு மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்றது.
இதில், சமூக ஆா்வலா் ஜெ. சுதாகா், பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் பிரான்சிலா விண்ணரசி, உதவித் திட்ட அலுவலா் டி. அகிலா மற்றும் ஊராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.