திருவாரூா் மாவட்டத்தில் நவ.25, 26- இல் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், வேளாண் ஆணையருமான எல். சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணி தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தலைமையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், வேளாண் ஆணையருமான எல்.சுப்ரமணியன் பேசியது:
திருவாரூா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல், அக்.27- ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், 1.1.2024-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு அன்று 18 வயது நிறைவடைவோரையும் வாக்காளா்களாக சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் தற்போதைய அறிவிப்பின்படி நவ.18,19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டு, நவ.25, 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வி. லதா, கோட்டாட்சியா்கள் சங்கீதா (திருவாரூா்), கீா்த்தனா மணி (மன்னாா்குடி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.