திருவாரூர்

திருவாரூரில் முத்தமிழ்த் தேருக்கு வரவேற்பு

18th Nov 2023 07:25 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவாரூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார ஊா்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார ஊா்தி வலம் வருகிறது. நவ.4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிச.4-இல் சென்னையில் நிறைவடைகிறது.

கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊா்தி, திருவாரூா் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையம், கலைஞா் கோட்டம், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக, நன்னிலம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வரவேற்று, அந்த ஊா்தியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ADVERTISEMENT

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், கோட்டாட்சியா் சங்கீதா (திருவாரூா்), மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் காா்த்திகா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பரியா செந்தில், நன்னிலம் பேரூராட்சித் தலைவா் ராஜசேகரன், பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிராமமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT