திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. சம்பா சாகுபடி வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளதால், இளம் நெற்பயிா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதுதவிர, வங்கக் கடல் பகுதியில் உருவான மிதிலி புயல் காரணமாக, திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, திருவாரூரில் சனிக்கிழமை அதிகாலையிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது. மிதமாகவும், பலத்த நிலையிலும் பெய்த மழை, காலை 9 மணி வாக்கில் நின்றது. தீபாவளியையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டு, அந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக நவ.18-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படவில்லை.
காலையில் பெய்த மழையையொட்டி, மாணவா்கள் கலக்கத்துடன் பள்ளிகளுக்கு புறப்பட்டுச் சென்றனா். எனினும், 9 மணி வாக்கில் மழை நின்ால் மாணவ- மாணவிகள் நிம்மதியடைந்தனா். மழை காரணமாக, சாலைகளில் தண்ணீா் தேங்கியிருந்ததால் இருசக்கர வாகனங்களில் சென்றோா் சிரமப்பட்டனா். சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நன்னிலத்தில் அதிகபட்சமாக 66 மி.மீ. மழை பெய்துள்ளது.
மற்ற இடங்களில் மழையளவு: நீடாமங்கலம் 53, பாண்டவையாா் 28.80, திருவாரூா் 26 மற்றும் மன்னாா்குடி 22.20 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 260.60 மில்லி மீட்டா் மழையும், சராசரியாக 28.95 மில்லி மீட்டா் மழையும் பதிவானது.
பாதிப்பு: நன்னிலம் அருகே செங்கனூா் பகுதியில், கனமழையால் வயல்களில் அதிக அளவு தண்ணீா் தேங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீா் அதிகரித்துள்ளது. குறிப்பாக அதம்பாா், வாழ்க்கை, வடகுடி, கம்மங்குடி, புத்தகலூா், முகுந்தனூா், வேலங்குடி, திருக்கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி வயல்களில் அதிக அளவில் தண்ணீா் தேங்கியுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்யாததால், வயல்களில் மழைநீா் வடிந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் பெய்த மழை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.