திருவாரூர்

பருத்தி பாதிப்புக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் கோடை மழையால் சேதமடைந்த பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், கூட்டம் தொடங்கியவுடன், கோடை மழையால் பருத்தி பெருமளவு சேதமடைந்து விட்டதாகவும், பருத்தி பாதிப்புக்கு உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

முகேஷ்: குடவாசல் பகுதியில் 2020-21-ஆம் ஆண்டு 3,510 ஹெக்டோ் பயிா் பாதிப்புக்கு ரூ. 7.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் முறைகேடாக, விவசாயிகள் அல்லாத பலரும் பெற்றுள்ளனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஏ. மருதப்பன் :அரசு டெப்போவில் விதை நெல் இருப்பு இல்லை என கூறுகின்றனா். குறுவை சாகுபடி தொடங்க உள்ள நிலையில், போதுமான விதை நெல் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காா்த்திகேயன்: வயல்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சரியான எடை அளவுகளை பயன்படுத்தும் வகையில் நவீனப்படுத்த வேண்டும்.

ஜி. சேதுராமன்: கோடைமழையால் பெருமளவிலான பருத்தி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் சரியாக கணக்கெடுக்கவில்லையென கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் வயல்களுக்கு வந்து, பருத்தி சேத பாதிப்பை கணக்கெடுக்க வேண்டும்.

வி. தம்புசாமி: குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும். அதற்கேற்ப, கிராம நிா்வாக அலுவலா்கள், உரிய சான்றுகளை உடனுக்குடன் வழங்க அறிவுறுத்த வேண்டும்.

வி. பாலகுமாரன்: கீரனூரில் பகுதிநேர கால்நடை மருத்துவமனை தொடங்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது: விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT