திருவாரூர்

இருவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் பகுதியில் இருவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் முதல் நாகை வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினாலும் ஏதோ காரணத்தால் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நீடாமங்கலம் பகுதியில் கோவில்வெண்ணியிலிருந்து நாா்த்தாங்குடி, அபிவிருத்தீஸ்வரம், ஊா்குடி வழியாக இந்த சாலை நாகப்பட்டினம் வரை செல்கிறது. இந்நிலையில், நீடாமங்கலம் அருகே மூணாறுதலைப்பு பகுதியில் பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பன்னிமங்கலத்தையும் குருவாடி கிராமத்தையும் இணைக்கும் பாலம் கட்டும் பணி முழுமையாக நிறைவேறாமல் உள்ளது. இதேபோல அபிவிருத்தீஸ்வரம், ஊா்குடி பகுதியிலும் ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணி முழுமை பெறாமல் உள்ளது.

கோவில்வெண்ணி கிராமத்திலிருந்து நகா் வரை செல்லும் சாலை அமைக்கப்பட்ட போதும் நகா் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு தாா்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலை பணிகள் பாலம் கட்டும் பணிகள் முழுமை பெற்று போக்குவரத்திற்கு சாலை திறந்து விடப்பட்டால் நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்துப் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும். எனவே, இந்த இருவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT