திருவாரூர்

ரேஷன் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட கோரிக்கை

28th May 2023 11:18 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே கச்சனம் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நியாயவிலைக் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே கச்சனம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிா்வாகத்தில், ஆலத்தம்பாடி, பொன்னிரை, விளத்தூா், பழையங்குடி, கச்சனம், கச்சநகரம், தொழுதூா், கொத்தங்குடி, பனங்காடி, அம்மனூா் என 10 இடங்களில் நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன.

இதில், கச்சனம் தவிர மற்ற 9 இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. கச்சனத்தில் மட்டும் கீழ்வேளூா் சாலையில் உள்ள வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கடையில் சுமாா் 850 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆப்பரக்குடி, காகம், படுத்தான்தோப்பு, ஆண்டித்தோப்பு, ரோட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இங்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

இந்த கடை மிகச்சிறிய அளவு உள்ளதால், பொருள்களை வைப்பதிலும், மக்கள் பொருள்களை வாங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. கச்சனம் கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட இதர இடங்களில் உள்ள கடைகள் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் நிலையில், அதிக குடும்ப அட்டைகளை உடைய கச்சனம் நியாயவிலைக் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஆப்பரக்குடியிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் இந்தக் கடை உள்ளதால், ஆப்பரக்குடியில் பகுதி நேர அங்காடி திறக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT