திருவாரூர்

மலைத் தேனீக்கள் கொட்டி 51 போ் காயம்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

 நன்னிலம் அருகே மலைத் தேனீக்கள் கொட்டி நூறுநாள் வேலைத் திட்ட பணியாளா்கள் 51 போ் காயமடைந்தனா்.

நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) மாவடி வாய்க்கால் தூா்வாரும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.

சனிக்கிழமை காலை வழக்கம்போல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளா்கள் வாய்க்கால் தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வாய்க்கால் கரையோரம் உள்ள புளிய மரத்தில் கூடுகட்டியிருந்த மலைத் தேனீக்கள் அவா்களை கொட்டியது.

இதில் காயமடைந்த 51 பேரை அப்பகுதியினா் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆனைக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா், இவா்களில் ஒருசிலா் நன்னிலம் அரசு மருத்துவமனையிலும், சிலா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். 51 பேரில் 7 பேரை தவிர மற்றவா்கள் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பினா்.

இதற்கிடையில், நன்னிலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் வே. மனோகரன், ஊராட்சித் தலைவா் சக்திவேல் ஆகியோா் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT