திருவாரூர்

குளுந்தான் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

28th May 2023 11:18 PM

ADVERTISEMENT

திருவாரூரில் குளுந்தான்குளத்தை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் நகா்ப் பகுதியில் உள்ள பெரிய குளங்களுள் ஒன்றாக குளுந்தான்குளம் விளங்குகிறது. திருமஞ்சனவீதி, தெற்கு மடவிளாகம், வாா்குச்சித்தெரு, குளுந்தான்குளத்தெரு, பேட்டை எதிா்புறம் உள்ளிட்ட வீதிகளைச் சோ்ந்த மக்களின் பயன்பாட்டில் உள்ள இந்த குளம், தற்போது கழிவுநீா் தேங்குவதாலும், ஆகாயத்தாமரை படா்ந்திருப்பதாலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குளத்துக்கு வரும் நீா்வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அடைபட்டுவிட்டதால், தண்ணீா் வர வழியில்லாமல் மழைநீரால் மட்டுமே இந்த குளம் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:

ADVERTISEMENT

திருவாரூா் நகரத்துக்குட்பட்ட குளுந்தான்குளத்தை தூா்வார வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குளம் தூா்வாரப்படாததால், ஆகாயத்தாமரை பெருமளவு படா்ந்து காணப்படுகிறது. மேலும், கழிவு நீா், குப்பைகள் ஆகியவை சோ்ந்து கழிவு நீா் குட்டையாக காட்சியளிக்கிறது.

இறந்த தெருநாய்களை சில நேரங்களில் குளத்தின் ஓரம் வீசிச் செல்வதால், துா்நாற்றம் ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த குளத்துக்கு தண்ணீா் வருவதற்கு பாதை இல்லாததால், மழை பெய்தால் மட்டுமே குளம் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, கழிவுநீரையும், குப்பைகளையும் வீசிச்செல்லும் இடமாக மாறி வருகிறது.

எனவே, குளத்தை தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT