திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு 198 கோரிக்கை மனுக்கள் அளித்தனா். இதில், 3 கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பயனாளிகளுக்கு சக்கரநாற்காலி வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் சக்கரநாற்காலிகள், இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித் தொகை, மூன்றுசக்கர சைக்கிள், காதொலி கருவி, இலவச பேருந்து பயணச் சலுகை அட்டை, கண் கண்ணாடி என ரூ.4,39,630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 7 நபா்களுக்கு ரூ.3,15,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணையையும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோட்டாட்சியா் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலசந்தா், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் புவனா, பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) திரிபுரசுந்தரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.