கோடை மழையால் பாதிக்கப்பட்ட எள், பருத்தி உள்ளிட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம், தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் ஜி. சேதுராமன் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
கடந்த 10 நாள்களாக திருவாரூா் மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் கனமழை காரணமாக எள், பருத்தி மற்றும் உளுந்து பயிா்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன.
கடனில் மூழ்கித்தவிக்கும் விவசாயிகளைக் காப்பாற்றும் என நம்பிய பருத்திப் பயிா்கள் மிகவும் மோசமாக உள்ளன. சில விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ளனா். பல விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.30,000 நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.