மன்னாா்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக செஞ்சிலுவை தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
உலக நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும், போா் காலங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவவும் செஞ்சிலுவை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பை தோற்றுவித்த ஜீன் ஹென்றி டியூனன்ட் பிறந்த மே 8-ஆம் தேதி ஆண்டுதோறும் உலக செஞ்சிலுவை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் மன்னாா்குடி வட்டக் கிளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணைத் தலைவா் என். ராஜப்பா தலைமை வகித்தாா். மருத்துவமனை தலைமை மருத்துவா் என்.விஜயகுமாா், ஜீன் ஹென்றி டியூனன்ட் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில், ரத்தக் கொடையாளா்கள் ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், மைய அலுவலா் வினோதா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். மகப்பேறு மருத்துவா் பரிமளா, செஞ்சிலுவை சங்க செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.