திருவாரூா் மாவட்டத்தில் கோடை மழையால் எள், பருத்தி போன்ற பயிா்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக திருவாரூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை பெய்யாத நேரங்களில் குளிா்ந்த வானிலை நிலவி வருகிறது. இதனால், கோடை சாகுபடி பயிா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள திருவாரூா் மாவட்டத்தில் கோடை காலத்தில், பருத்தி, எள் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பருத்தி 8,500 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 16,281 ஹெக்டோ் அளவிலும், எள் 1,600 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 4,261 ஹெக்டோ் அளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதேபோல் 8,560 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததால், நிகழாண்டு பருத்தி சாகுபடி பரப்பு இலக்கை விட அதிகரித்துள்ளது. அதேபோல், அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு சாகுபடிக்கு மாற்றாக எள் தெளிக்கப்பட்டதால், எள் சாகுபடியின் பரப்பும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த சில நாள்களாக திருவாரூா் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் எள், பருத்தி வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யாததால், தண்ணீரை வடியச் செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனா்.
வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவா்கள் தெரிவித்தது:
இனியும் தொடா்ந்து மழை பெய்யும்பட்சத்தில் பயிா்களில் தண்ணீா் தேங்கி அழுகும் நிலை ஏற்படும். முன்பு பெய்த மழையால் உளுந்து, பயிறு சேதமடைந்ததால் உடனடியாக கடன் வாங்கி எள் தெளித்தோம். மேலும், எள் சாகுபடிக்காக இரண்டு முறை உழவு, விதை, பணியாளா் செலவு என இரட்டிப்பு செலவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்துள்ள மழையால் எள்ளும் பாதிக்கப்பட்டால், பொருளாதார ரீதியாக பெருமளவு பாதிப்பு ஏற்படும் என கவலை தெரிவிக்கின்றனா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியை சுற்றியுள்ள பகுதிகளான பாமணி, கொறுக்கை, தேசிங்குராஜபுரம், கொக்காலடி உள்ளிட்ட கிராமங்களில் 1,010 ஹெக்டோ் பரப்பளவிலும், முத்துப்பேட்டை பகுதியில் 100 ஹெக்டோ் பரப்பளவிலும் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை மழையால் எள் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.