மன்னாா்குடியில் தனியாருக்கு சொந்தமான குளத்தில் நூற்றுக்கணக்காண மீன்கள் செத்து மிதப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
மன்னாா்குடி கனகாம்பாள்கோயில் தெருவில் தனியாா் மீன்கள் வளா்ப்பு அமைப்புக்கு சொந்தமான 2 ஏக்கா் பரப்பளவில் ராவணன் குளம் உள்ளது. இந்த குளம் மீன் வளா்ப்பதற்காக தனியாருக்கு குத்தக்கு விடப்படுள்ளது. இதில், பல வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளா்த்து பின்னா் உணவுக்காக பிடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
குளத்தின் அருகே உள்ள சஞ்சீவி தெருவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் அண்மைக்காலமாக இந்த குளத்தில் கலப்பதால், குளத்து நீா் மாசு ஏற்பட்டு, மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ராவணன் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பது தெரியவந்தது. துா்நாற்றம் வீசியதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் குளத்தை பாா்வையிட்டாா். அவா் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஜி. ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தி, தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
இக்குளத்தில் கழிவு நீா் கலப்பதை தடுப்பதுடன், இச்செயலில் ஈடுபடுபவா்கள் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.