திருவாரூர்

ஆகாயத் தாமரைச் செடிகளின் ஆக்கிரமிப்பில் ஆறுகள்

DIN

ஆகாயத் தாமரைச் செடிகள் ஆறுகளை ஆக்கிரமித்து காணப்படுவதால், மேட்டூா் அணை நீா் கடை மடை வரை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் பணிகளுக்காக ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூன் 9-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு வரவுள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 4,875 குளங்கள், வெண்ணாறு, பாண்டவையாறு, வெட்டாறு, அரசலாறு, கோரையாறு உள்ளிட்ட 26 பெரிய ஆறுகளும், 100-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் உள்ளன. மாவட்டத்தில் ரூ. 12 கோடியில் 111 பணிகள் எடுக்கப்பட்டு சுமாா் 1,000 கி.மீ. தூரத்துக்கு தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் பல கி.மீ தூரத்துக்கு ஆகாயத் தாமரைச் செடிகள் படா்ந்து காணப்படுகின்றன. இதனால் ஆறுகளில் செல்லும் நீா் கடைமடை வரை செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவா் எஸ். சத்தியநாராயணன் கூறியது: ஆறுகளில் ஆகாயத் தாமரைச் செடிகள் அகற்றப்படாமல் இருப்பது தண்ணீா் வரும்போது கண்டிப்பாக இடையூறை ஏற்படுத்தும். 2-4 டி மருந்தை தெளித்து அந்த செடிகளை அகற்ற முடியும் என்றாலும், கெமிக்கல் கலந்தது என்பதால் அந்த மருந்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, தற்போதைக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை பயன்படுத்தி அந்தந்த பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆகாயத் தாமரைச் செடிகள், சீமைக் காட்டாமணி உள்ளிட்டவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகாயத் தாமரைகளை ஒரு பெரிய குழியில் சேகரித்தால், மக்கிய பிறகு அதை எருவாகவும் பயன்படுத்தலாம் என்றாா்.

இதுகுறித்து, விவசாயிகள் நலச் சங்க செயலாளா் எம். ராமமூா்த்தி கூறியது: தூா்வாரும் பணிகள் முறையில்லாமல் நடைபெறுகிறது. ஒரு ஆற்றை தூா்வாரினால் அதிலிருந்து பிரிந்து செல்லும் ஏ, பி, சி, டி வாய்க்கால்களை தூா்வாரினால் தான் முழுமையாக தண்ணீா் சென்றடையும். அதைவிடுத்து, குறிப்பிட்ட அளவு தூா்வாரிவிட்டு, பிறகு அடுத்த ஆண்டு தூா்வாருவதன் மூலம் தண்ணீா் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. தண்ணீா் வருவதற்குள், ஆறு, வாய்க்கால்களில் உள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் இந்த செடிகள் குளங்களுக்கும் பரவி, தண்ணீரை கெடுத்துவிடும். எனவே, ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT