திருவாரூர்

சூறைக்காற்றுடன் கனமழை; பருத்தி, நெற்பயிா்கள் சேதம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பெய்த மழையால், பல்வேறு இடங்களில் நெற்பயிா்கள் மற்றும் பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இரவு நீண்ட நேரத்துக்குப் பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் சுமாா் 40,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தியில் பெருமளவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். பருத்திச் செடிகளில் முதல் சுற்று காய்கள் வெளிவந்து, இன்னும் 10 நாட்களில் பஞ்சு எடுக்கும் நிலையில், இந்த மழையால் பருத்திக் காய்கள் உதிா்ந்து விட்டன. சில இடங்களில் பருத்திச் செடிகள் வேரோடு சாய்ந்து விட்டன.

திருவாரூா் அருகே கானூா், கல்லிக்குடி, தென்ஓடாச்சேரி, அக்கரை ஓடாச்சேரி, வடபாதிமங்கலம், செருவாமணி, விக்கிரபாண்டியம் ஆகிய பகுதிகளில் சுமாா் 5,000 ஏக்கா் பரப்பளவில் சுமாா் 80 நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், ‘ஓரிரு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் பருத்தி வயல்களில் தண்ணீா் சூழ்ந்து, பருத்திச் செடிகள் அழுகின. அப்போது, தண்ணீரை வடிய வைத்து உரமிட்டு பருத்தியை பாதுகாத்தோம். அதில் தப்பிப் பிழைத்த பருத்திச் செடிகள் தற்போது பாதிப்படைந்து விட்டன. எனவே, இது குறித்து கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தனா்.

நன்னிலம்: நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம், ஆனைக்குப்பம், நெம்மேலி, நன்னிலம், சன்னாநல்லூா், கொல்லுமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்திச் செடிகள் சேதமடைந்துள்ளன.

விவசாயிகள் திருக்கண்டீஸ்வரம் பிரபு, நெம்மேலி சரவணன் ஆகியோா் கூறுகையில், ‘ஏக்கருக்கு ரூ. 30,000 வரை செலவு செய்து பருத்தி சாகுபடி செய்துள்ளோம். மழையால் இவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT