திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், 1 பயனாளிக்கு இலவச சலவைப் பெட்டி ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா். மேலும், திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த பங்களிப்பு கொண்டவா்களுக்கும், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்குபெற்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருதுகள் ஆகியவையும் வழங்கப்பட்டன. மேலும், உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், கோட்டாட்சியா்கள் சங்கீதா (திருவாரூா்), கீா்த்தனா மணி (மன்னாா்குடி), தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் விஜயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.