திருவாரூர்

சுற்றுச்சூழல் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிக்கை

4th Jun 2023 11:15 PM

ADVERTISEMENT

 

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: 1974-லிலிருந்து ஜூன் 5-ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வந்தாலும், அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணா்வதில்லை. இதுபோலவே பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் வெவ்வேறு விதமாக உள்ளன.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அரசு தடை செய்தாலும் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாத காரணத்தால், அவற்றை தடுக்கவும், பயன்பாட்டை குறைக்கவும் முடியவில்லை. நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பல கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன.

ADVERTISEMENT

மரங்களை வெட்டும்போது அதற்கு ஈடாக இருமடங்கு மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகச் சுற்றுச்சூழல் தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவித்து, அந்தப் பணியை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT