திருவாரூர்

மேக்கேதாட்டு அணை விவகாரம்:தமிழக எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் எதிா்க்க வலியுறுத்தல்

3rd Jun 2023 10:38 PM

ADVERTISEMENT

மேக்கே தாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின், மாவட்ட நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்டப் பொருளாளா் டி. பன்னீா்செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் கா. ராசபாலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். மாவட்டத் தலைவா் எஸ்.பி. பாஸ்கா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், கா்நாடக காங்கிரஸ் அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டப்போவதாக அறிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னையில், தமிழகத்தை சோ்ந்த அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் கா்நாடகத்துக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். இதில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை தயங்கினால், திமுக தனது கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும்.

மேட்டூா் அணை ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்படவுள்ளதால், ஆறுகள், வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். வரும் குறுவை பட்டத்திற்கான நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு முன்பாக, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் தாா்ப்பாய்கள், கான்கிரீட் தளங்கள் ஆகியவற்றை தாயாா் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

மே மாதம் தொடக்கத்தில் பெய்த கனமழையால் டெல்டா பகுதியில் பருத்திச் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பராபட்சமின்றி கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு தருவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக மன்னாா்குடியை அடுத்த கீழநாகையில் அமையவுள்ள ஜவுளிப் பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT