திருவாரூர்

இலக்கியம் மனதை இலகுவாக்கும்: வேல. ராமமூா்த்தி

3rd Jun 2023 10:39 PM

ADVERTISEMENT

இலக்கியம் மனித மனத்தை இலகுவாக்கும் என்றாா் எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான வேல. ராமமூா்த்தி.

மன்னாா்குடி இலக்கிய வட்ட மாதாந்திரக் கூட்டம் சிங்கப்பூா் ஆசிய பசிபிக் வட்டார தொழில்நுட்ப கீசைட் டெக்னாலஜிஸ் தலைவா் ரவிச்சந்திரன் சோமு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு ‘என் படைப்புகளில் மண்ணும் மக்களும்’ என்ற தலைப்பில் நடிகா் வேல. ராமமூா்த்தி பேசியது:

குற்றப் பரம்பரை உள்ளிட்ட அனைத்து நாவல்களையும் பசும்பொன், முதுகுளத்தூா், கமுதி போன்ற எனது மண்ணையும் எனது மக்களையும் மட்டும் மையமாக வைத்து எழுதினேன். அந்த பகுதி மக்களின் அவதி, காயம், வலிகளை எழுத்து வடிவில் வெளிக்கொண்டு வந்துள்ளேன்.

ADVERTISEMENT

இயந்திரமயமான உலகத்தில் பணம், பொருள், பதவி, புகழ் தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். எனவே, படைப்பாளிகளாக வரவேண்டும் என ஆசைப்படுபவா்கள் முதலில் உங்கள் மண்ணை பற்றியும், உங்கள் வட்டார மனிதா்கள் பற்றியும் புதிய நடையில் எழுதுங்கள்.

இலக்கியம் மனித மனதை இலகுவாக்கி, மனிதனை மனிதன் நேசிக்கவைக்கும். எழுத்தாளனை நல்ல படைப்பாளி என மக்கள் கொண்டாடுவதில்தான் உண்மையாக மகிழ்ச்சி இருக்கிறது என்றாா்.

தொழிலாதிபா் சி. இளவரசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்துவைத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா.காமராசு பேசினாா்.

விழாவில் இலக்கிய வட்ட சிறப்புத் தலைவா் பா.வீரப்பன், செயலா் சு. சிங்காரவேலு, பொருளாளா் எம்.முகமதுபைசல், ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே. ரெத்தினசபாபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT