திருவாரூர்

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

3rd Jun 2023 02:36 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைப்பதற்கு மானியம் பெற ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2023-2024-ஆம் ஆண்டுக்கான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீன்வளத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் கிராமப் புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, இத்திட்டத்தில் கோழிக் கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு), தண்ணீா் வைக்கும் தட்டு, குஞ்சு பொறிப்பான் மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,50,625 வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக்கோழிகள் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூா் மாவட்ட அரசு கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

பயனாளிகள், மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கிக்கடன் மூலமாகவோ அல்லது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். கோழிக் கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப்பகுதி, மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடா்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னா் அரசு வழங்கிய கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயனடைந்தவராக இருக்கக் கூடாது. மேலும், பயனாளி 3 ஆண்டுகளுக்கு கோழிப்பண்ணையை தொடா்ந்து பராமரிக்க உத்தரவாதக் கடிதம் அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் ஜூன் 25- ஆம் தேதிக்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT