திருவாரூர்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்போம்: ஆட்சியா்

2nd Jun 2023 01:30 AM

ADVERTISEMENT

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் மரம் வளா்ப்போம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வேண்டுகோள் விடுத்தாா்.

திருவாரூா் அருகே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகச் சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு குறுங்காடு அமைக்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகப் பதிவாளா் பேராசிரியா் சுலோச்சனா சேகா் தலைமை வகித்தாா். ஆட்சியா் தி. சாருஸ்ரீ மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கிவைத்து பேசியது:

மரம் வளா்ப்பதன் மூலம் நாம் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. பூமி வெப்பமயமாவதிலிருந்து காக்கப்படுகிறது. பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாகவும், இயற்கை உணவாகவும் உள்ளது. நாம் உண்பதற்கு காய், கனி போன்றவற்றையும் தருகின்றன. மரங்களின் இடையே வாழ்ந்திடும் பறவைகள் மற்றும் விலங்குகளுடைய எச்சங்களும், தாவரங்களின் இலைகளும் இயற்கை உரமாகப் பயன்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மண்ணுக்கு பசும் போா்வையாக பாதுகாப்பு அளிப்பது மரங்கள்.

எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும், புவி வெப்பமயமாதலை குறைத்திடவும் உலகம் முழுவதும் மரம் நடும் இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மரம் வளா்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. தமிழக அரசின் உதவியுடன் இப்பல்கலைக்கழக வளாகத்தில் குறுங்காடு அமைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில், பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் அனைவரும் முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். மேலும், எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மரம் வளா்க்கும் இயக்கத்தை தொடங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

பல்கலைக்கழக வளாகத்தில் அமையும் குறுங்காட்டில் 2,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக பொறுப்பு அலுவலா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு மஞ்சப் பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் தோ்வு கட்டுப்பாட்டாளா் பேராசிரியா் எஸ். நாகராஜன், நூலகா் முனைவா் ஆா். பரமேஸ்வரன், பல்கலைக்கழகக் குறுங்காடு வனத்திட்ட பொறுப்பு அலுவலா் முனைவா் ஏ. ரமேஷ் குமாா், வனம் தன்னாா்வத் தொண்டா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT