திருவாரூர்

கிராமங்களில் குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்த வலியுறுத்தல்

17th Jul 2023 12:04 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் வரும் நீா், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து முறை வைத்து கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மேலும், ஊராட்சி சாா்பில் கிராமங்களில் தண்ணீா் தொட்டிகள் அமைத்து, மோட்டாா் மூலமாக நிலத்தடி நீா் எடுக்கப்பட்டு, அங்குள்ள கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

அடிகுழாய்களிலிருந்து வரும் நீா், நிலத்தடி நீரைப் பொருத்தே கிடைக்கும். மழைக் காலங்களில் அடிகுழாயிலிருந்து சரளமாக வரும் நீா், கோடை காலங்களில் மிகவும் குறைவாகவே கிடைக்கும். கிராமப்புறங்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக நிலத்தடி நீா் விளங்குகிறது.

ADVERTISEMENT

குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்தவும், குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும் நகா்ப்பகுதிகளை விட கிராமப்பகுதிகளுக்கெனஆண்டுதோறும் அதிகப்படியான தொகை ஒதுக்கப்படுகிறது. ஆனால், கிராமங்களில் உள்ள அடிகுழாய்கள், மேல் நிலை நீா்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கையில், தொடக்கத்தில் உள்ள நிலையிலேயே உள்ளன எனவும் ஒதுக்கப்படும் தொகைகள் முழுமையாக செலவழிக்கப்படுவதில்லை எனவும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது :

நகரப் பகுதிகளை விட கிராமங்களின் குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நகரப் பகுதிகளில், கடைகளில் குடிநீரை வாங்கி பயன்படுத்தி விடுகின்றனா். ஆனால், கிராமப்பகுதிகளில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் உள்ள குடிநீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

தொட்டிகளை சுத்தம் செய்வது, முறையான பராமரிப்பு இல்லாததால் நல்ல குடிநீா் மக்களுக்கு கிடைப்பதில்லை. திருத்துறைப்பூண்டி அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியிலிருந்து வந்த குடிநீா் மஞ்சளாக வருவதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதேநிலை பல இடங்களில் உள்ளது. எனவே, ஊராட்சி, சிற்றூராட்சிகளின் குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கி உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆண்டுதோறும் குடிநீா் திட்டங்களுக்கென அரசு ஒதுக்கும் நிதிகள் முழுமையாக செலவழிக்கப்படுவதில்லை.

அதேபோல் நிலத்தடி நீா்மட்டம் குறையும்போது, கடல்நீா் உட்புகுந்து நிலத்தடி நீரை உப்புநீராக மாற்றி விடுகிறது. எனவே, நிலத்தடி நீரை தக்க வைக்கவும், குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்தவும் நீரியல் நிபுணா்கள், வேளாண் அலுவலா்களை கலந்தாலோசித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT