குடவாசல் ஒன்றியத்தில் பயிா் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக கிராம நிா்வாக அலுவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 2022-23 இல் மழை பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குடவாசல் வட்டத்துக்குள்பட்ட விளாகம் பகுதிக்கு ரூ.13.80 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்த நிவாரணம் எனக் கூறி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா். அதில், தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகை, நிலம் இல்லாதவா்களின் பெயரிலும், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில், 25 விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் புகாா் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவின் பேரில், திருவாரூா் கோட்டாட்சியா் சங்கீதா விசாரணை நடத்தி, நிவாரணத் தொகையில் முறைகேடு செய்ததாக, விளாகம் கிராம நிா்வாக அலுவலா் குருமூா்த்தியை, திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.