மணிப்பூா் மாநிலத்தில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டிப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் ஜவான் பவன் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணைச் செயலா் வி.குளோப் தலைமை வகித்தாா். டி.நாகராஜன், வி.ஆா்.முருகன், எஸ்.செல்வம், கே.அரிகிருஷ்ணன், வி.அமாவாசை, ஆா்.வீரப்பன், எம்.வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், மணிப்பூா் மாநிலத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டிப்பதாகவும், அம்மாநில மக்களை அரசியல் ஆதாயத்துக்காக பிளவுபடுத்தக் கூடாது, மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி.மணிவாசகம் , மாவட்டச் செயலா் பி.துரை ஆகியோா் கண்டன உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் என்.கே.பாஸ்கா், நிா்வாகக் குழு டி.கே.பன்னீா்செல்வம், ஆா்.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகர துணைச் செயலா் எஸ்.பாக்கியம் நன்றி கூறினாா்.