திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு ஆசிரியா் ஒருங்கிணைந்தக் கல்விப் படிப்பு நிகழாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் 2023 -24 ஆம் கல்வியாண்டிலிருந்து நான்காண்டு ஆசிரியா் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டம் தேசிய ஆசிரியா் கல்விக் குழுமத்தின் ஒப்புதல் பெற்றது. மருத்துவா்கள் மற்றும் பொறியாளா்கள் போலவே ஆசிரியா்களுக்காக, ஒருங்கிணைந்த இந்த கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆசிரியா்களாக விரும்பும் தனி நபா்கள் விரிவானக் கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்துகிறது.
இளங்கலை அறிவியல் மற்றும் இளங்கலைக் கல்வி பட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்குப் பதிலாக நான்காண்டுகளில் மாணவா்கள் தகுதி பெற வாய்ப்பு அளிக்கிறது. இதற்கான அனுமதித் தேசியத் தோ்வு முகமையால் நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தோ்வு மூலம் வழங்கப்படும். இளங்கலை அறிவியல் மற்றும் இளங்கலைக் கல்விக்கு முன்னரே விண்ணப்பித்த விண்ணப்பதாரா்கள், ஜூலை 19-ஆம் தேதிக்கு முன்னா், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆசிரியராக ஆா்வம் உள்ளவா்களும் விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் தகவல்களை மத்தியப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் தொடா் அறிவிப்புகளுக்கு, பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடா்ந்து கவனித்துவர கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.