கோயில்கந்தன்குடி, திருவீழிமிழலையில் மாட்டுப் பொங்கலையொட்டி கோபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில்கந்தன்குடி கிராமத்தில் உள்ள உமாபசுபதீஸ்வரா் கோசாலையில் விக்னேஸ்வரபூஜை, புண்ணியாவாஜனம், கலசபூஜை நடைபெற்றது. மஞ்சள், திரவியம், பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
கோபூஜையில் அருகில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு கோப்ரதஷணம் செய்து, பசுக்களுக்கு அகத்திக்கீரை, சா்க்கரைப் பொங்கல், பழங்களைக் கொடுத்து மலா்களால் அா்ச்சித்து வணங்கி, வழிபட்டனா்.
திருவீழிமிழலை கோ ரஷண சமிதியில் கோபூஜை, மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இந்த சமிதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. மக்கள் பசுக்களைக் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து, பூ மாலை மற்றும் நெட்டிமாலை அணிவித்து அலங்கரித்தனா்.
பின்னா் சமிதியில் வெண்பொங்கல் மற்றும் சா்க்கரைப் பொங்கல் தயாரித்து, அவற்றுடன் பழங்கள் வைத்துப் பசுக்களுக்கு பூஜை செய்து, வாழைப்பழம், அகத்திக்கீரை, புல், தீவனம் ஆகியவற்றை அளித்து சுற்றி வந்து வணங்கி வழிபட்டனா்.