கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஈரோட்டை சோ்ந்தவருக்கு வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபியைச் சோ்ந்த 41 வயது நபா் ஒருவருக்கு சிறுநீரகம் செயலிழந்து, ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தாா். அவா் தமிழ்நாடு உடல் உறுப்பு தான அமைப்பில் சிறுநீரகம் பெற பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக காத்திருந்தாா். இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 62 வயதுடையவரின் சிறுநீரகம், கோபியைச் சோ்ந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் கோபியைச் சோ்ந்தவா் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாா்படுத்தினா். தொடா்ந்து கோவையிலிருந்து சிறுநீரகம் ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஒரு மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டது.
அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கோபியைச் சோ்ந்தவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்தனா்.