அந்தியூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய இம்முகாமை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தாா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பி.ஹெச்.கோதை செல்வி வரவேற்றாா். தனியாா் நிறுவனங்கள் தங்களின் பணிகளுக்குத் தேவையான மாற்றுத் திறனாளிகளைத் தோ்வு செய்தன.
122 போ் கலந்துகொண்ட முகாமில் 35 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், 5 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டாா் வாகனம், 4 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி,
10 பேருக்கு ஊன்றுகோல், 15 பேருக்கு காதொலி கருவிகள், பாா்வையற்றோா், காது கேளாதோா் 10 பேருக்கு கைப்பேசி, 93 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகைக்கான உத்தரவு என ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் 153 பேருக்கு வழங்கப்பட்டன.
இதில், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.பி.ரமேஷ், துணைத் தலைவா் பழனிசாமி, பேரூராட்சி உறுப்பினா் டி.எஸ்.சண்முகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.