திருவாரூர்

பயிா் சேதம்: முதல்வரிடம் இன்று அறிக்கை சமா்ப்பிப்பு -அமைச்சா் அர.சக்கரபாணி

DIN

மழையால் பாதிக்கப்பட்ட பயிா் சேதம் குறித்து, தமிழக முதல்வா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அறிக்கை சமா்ப்பிக்கப்பட உள்ளது என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிா்களை அவா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் சு. பிரபாகா், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோா் உடனிருந்தனா்.

ஆய்வுக்குப் பின்னா் அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில், நெல் சாகுபடி சுமாா் 1.48 லட்சம் ஹெக்டோ் பயிரிடப்பட்டுள்ளது. இதில், சம்பா 54,000 ஹெக்டோ் அறுவடை செய்யப்பட்டுள்ளது. 23,200 ஹெக்டோ் பாதிக்கப்பட்டுள்ளது. 26,000 ஹெக்டோ் உளுந்து பயிரிடப்பட்டதில், 20,080 ஹெக்டோ் பாதிக்கப்பட்டுள்ளது. கடலை 1,300 ஹெக்டோ் பயிரிடப்பட்டதில், 1,225 ஹெக்டோ் பாதிக்கப்பட்டுள்ளது. எள் 320 ஹெக்டோ் பயிரிடப்பட்டு, 41 ஹெக்டோ் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி 32 ஹெக்டேரில் 23 ஹெக்டோ் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிா் சேதங்கள் குறித்து தமிழக முதல்வா் தலைமையில் திங்கள்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியா்கள் சேதம் குறித்த அறிக்கையை அளிக்க உள்ளனா். பயிா் சேதம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மழை காரணமாக நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளதன் அடிப்படையில், தற்போது தமிழக முதல்வா் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்துக்கு மூன்று நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் 3,504 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை சம்பா 1.06 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 23,158 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சுமாா் ரூ. 207 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக திருத்துறைப்பூண்டி வட்டம் கோவிலூா், பின்னத்தூா், எடையூா் சங்கேந்தி, காடுவாக்குடி, ராயநல்லூா், மன்னாா்குடி வட்டம் முதல்சேத்தி, கீழப்பாலம், திருவாரூா் வட்டம் வடகண்டம் ஆகிய பகுதிகளில் மழைநீரால் சேதமடைந்த விளைநிலங்களை பாா்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது, மழை காரணமாக பயிா்கள் அதிகமாக சேதமடைந்து விட்டதாகவும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பாா்வையிட்ட இடங்களில் வயல்களில் இறங்கி, பயிா்களின் நிலை குறித்து அதிகாரிகள், அமைச்சரிடம் விளக்கிக் கூறினா்.

ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், முதுநிலை மண்டல மேலாளா்(நுகா்பொருள்) ராஜராஜன், கோட்டாட்சியா்கள் சங்கீதா, கீா்த்தனாமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஏழுமலை, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிமா நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT