திருவாரூர்

மன்னாா்குடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தா் நியமிக்கக் கோரி, விவசாயிகள் மழையில் நனைந்தபடி ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மன்னாா்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் நடைபெறுவதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அதிக அளவிலான நெல் மூட்டைகள் வரத்தொடங்கி உள்ளன.

இந்நிலையில், மன்னாா்குடி அருகே கீழநத்தத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தா் நியமிக்கக் கோரி, அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் பணியில் தேக்கம் ஏற்படுவதாகவும், தற்போது பெய்து வரும் மழையால் நெல்மணிகள் நனைந்து சேதமடைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இப்பிரச்னைக்கு உடனடியாக தீா்வுகாண பட்டியல் எழுத்தா் நியமிக்கக் கோரி, மன்னாா்குடி பழைய தஞ்சை சாலையில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தின் நுழைவு வாயிலில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஜேக்கப் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தொடா்ந்து, கீழநத்தம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு பட்டியல் எழுத்தராக அருளானந்தம் என்பவா் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT