திருவாரூர்

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்: ஆலங்கோட்டை பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்திற்கு மாவட்ட அளவில் கட்டுரைகள் சமா்ப்பிக்கும் போட்டியில் சிறப்பிடம் பிடித்த ஆலங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் யுனிசெப் நிறுவனம், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்திற்கு புதிய திட்டங்கள் தொடா்பாக கட்டுரைகள் சமா்ப்பிக்கும் போட்டியை நடத்தியது.

திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 589 திட்டங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. இதில் 10 திட்டங்கள் சிறந்தவையாக தோ்வு செய்யப்பட்டன. அவற்றில் ஆலங்கோட்டை திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவா்கள் எஸ். புகழேஸ்வரன், என். அா்ஜுன் ஆகியோா் சமா்ப்பித்த ‘மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான எளிய சாதனம்’ மற்றும் பிளஸ்-1 மாணவிகள் ஜெயதா்ஷினி, ஐ. சௌபரணி ஆகியோா் சமா்ப்பித்த ‘இருசக்கர வாகனத்தில் ஏற்படும் விபத்துகளில் இருந்து காத்துக்கொள்ளும் முறை’ ஆகிய கட்டுரைகளும் அடங்கும்.

இக்கட்டுரைகள் மண்டல அளவிலான போட்டியில் சமா்பிக்கப்பட்டுள்ளன. இதில், தோ்வு செய்யப்பட்டால் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும்.

ADVERTISEMENT

இதையொட்டி, இக்கட்டுரைகளை சமா்ப்பித்த மாணவ- மாணவிகளையும், வழிகாட்டியாக செயல்பட்ட முதுகலை வேதியல் ஆசிரியா் ஜி. மனோகரனையும் தலைமை ஆசிரியா் ஆா். சங்கரநாராயணன், பெற்றோா் சங்கத் தலைவா் எஸ். மோகன்தாஸ் ஆகியோா் பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT