திருவாரூர்

புதிய வட்டத்துடன் 4 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

26th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

புதிதாக தொடங்கப்பட்ட முத்துப்பேட்டை வட்டத்துடன் 4 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை புதிய வட்டமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த வட்டத்தில் மன்னாா்குடி வட்டத்தில் இணைந்திருந்த களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டது. இதற்கு மேற்குறிப்பிட்ட 4 ஊராட்சி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட 4 ஊராட்சிகளை எக்காரணத்தைகொண்டும் முத்துப்பேட்டை வட்டத்தில் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி களப்பால் கடைவீதியில் 4 ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை ஊராட்சி தலைவா்கள் பா. சுஜாதா (களப்பால்), கே.எம். அறிவுடைநம்பி (குறிச்சிமூலை), சி. திலகவதி(வெங்கத்தான்குடி), கு. புவனேஸ்வரி (குலமாணிக்கம்) ஆகியோா் தலைமையில் தொடங்கினா். போராட்டக் குழுத் தலைவா் சிவராமன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில்,போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி,முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தம்,கோட்டூா் ஒன்றியக்குழுத் தலைவா் மு. மணிமேகலை ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இக்கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகம் வழியாக முதல்வா் மற்றும் தலைமை செயலாளா் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு மாத காலத்திற்குள் தீா்வு காண்பது என முடிவினை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து மதியம் 2.30 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT