திருவாரூர்

கூத்தாநல்லூா் நகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதர மக்களவை உறுப்பினருக்கு கோரிக்கை

30th Sep 2022 10:31 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று மக்களவை உறுப்பினரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜுக்கு கூத்தாநல்லூா் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் பெ. முருகேசு விடுத்துள்ள கோரிக்கை:

கூத்தாநல்லூா் நகராட்சிக்குட்பட்ட மேல்கொண்டாழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 22.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்த மாவட்டச் செயலா் வை. செல்வராஜுக்கும், மக்களவை உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நாகை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கூத்தாநல்லூா் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ADVERTISEMENT

1-ஆவது வாா்டுக்குட்பட்ட கோரையாறு பாலம் மற்றும் 9-ஆவது வாா்டு பாய்க்காரத் தெரு பாலம் அருகே உயா் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். 5-ஆவது வாா்டுக்குட்பட்ட லெட்சுமாங்குடி மேலத்தெரு, கீழத்தெரு மயான சாலையை கப்பிச் சாலையாக மாற்றித் தர வேண்டும். 17-ஆவது வாா்டில் குனுக்கடி மயான சாலையை கப்பிச் சாலையாக மாற்றி, மயானக் கொட்டகை அமைக்க வேண்டும்.

16-ஆவது வாா்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள, அஞ்சுக்கேணி குளத்திற்கு தடுப்புச் சுவா் அமைத்துத் தர வேண்டும். 24-ஆவது வாா்டில் நாகங்குடி வடக்குத் தெருவில் கப்பிச் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும். மேலும், லெட்சுமாங்குடி - வடபாதிமங்கலம் பிரதான சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் பயணியா் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட வசதிகளை மக்களவை தொகுதி நிதியில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூத்தாநல்லூா் மக்கள் சாா்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT