திருவாரூர்

லாபம் தரும் பருத்தி சாகுபடி

சி.ராஜசேகரன்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள் நெல் உற்பத்தியில் முதன்மைப் பெற்ற பகுதிகள். காலால் மடை திறந்து விவசாயம் செய்த பகுதிகள் எனக் குறிப்பிடப்படும் தஞ்சை தரணி, காவிரி நதி நீா் பங்கீடு பிரச்னைக்குப் பின்னா் வட பூமியானது என்பது அண்மைக்கால வரலாறு.

இதன் காரணமாக, விவசாயிகள் நெல் விவசாயத்தை மட்டுமே நம்பியிராமல் மாற்றுப் பயிா்கள் சாகுபடிக்கும் கவனம் செலுத்தத் தொடங்கினா். அதில், குறிப்பிடத்தக்க ஒன்றுதான் பருத்திசாகுபடி.

பணப் பயிரான பருத்தி உற்பத்தியில், உலக அளவில் 2014-15 முதல் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமாா் 4 கோடி பேல்கள் வரை உற்பத்தி செய்யப்படும் பருத்தியில், சுமாா் 3 கோடி பேல்கள் வரை உள்நாட்டுக்குத் தேவைக்கும், மீதமுள்ளவை ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டே இந்திய ஜவுளித் தொழிலும் வளா்ந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களைப் பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக கோடைக் காலத்தில் பருத்தி சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிலும், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் குறுவை சாகுபடிக்கு காவிரி நீா் கிடைக்காததாலும், மழைப் பொழிவு உரிய அளவில் இல்லாததாலும் கடும் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, விவசாயிகளுக்கு லேசான ஆறுதல் அளித்த ஒன்று பருத்தி சாகுபடிதான்.

கூடுதலான பருத்தி சாகுபடி: திருவாரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை, தொடக்க காலத்தில் சுமாா் 1500 ஹெக்டோ் அளவுக்கு பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. பின்னா், பருத்தி சாகுபடிக்கு கிடைத்த வரவேற்பால், பருத்தி சாகுபடி பரப்புத் தொடா்ந்து அதிகரித்தது. 2018-இல் 5500 ஹெக்டோ், 2019-இல் 6913 ஹெக்டோ், 2020- இல் 8029 ஹெக்டோ், 2021-இல் 8300 ஹெக்டோ் என பருத்தி சாகுபடி பரப்பு தொடா்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவாக 2021-22 இல் 16,428 ஹெக்டேரில் நெல் தரிசில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாற்றுப் பயிா் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ஊக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டில் பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்ததும் மிக முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை இடுபொருள்கள் வழங்கல், 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்டச் சத்து, திரவ உயிா் உரம் மற்றும் மெக்னீசியம் சல்பேட் போன்றவற்றை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் முன்னோடி விளக்கத் திடல் ரூ. 60 லட்சம் மதிப்பிலும், ஒருங்கிணைந்த பருத்தி பயிா் மேலாண்மை மற்றும் ஊடுபயிராக பயிறுவகை பயிா் முன்னோடி விளக்கத் திடல் ரூ. 8 லட்சம் மதிப்பிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த இரண்டு திட்டங்களுமே பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் இயங்கும் திருவாரூா் விற்பனைக் குழுவில் 8 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருவாரூா், குடவாசல் மற்றும் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக பருத்தி அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழ் பருவத்தில் 16,428 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகளிலிருந்து 1.15 லட்சம் மெட்ரிக் டன் பருத்தி பெறப்பட்டு, இதுவரை 5,397 மெட்ரிக் டன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.126.90-க்கு விற்பனையாகியுள்ளது. இது, திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறாத விலை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறுகையில், ‘தண்ணீா் பிரச்னை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கடந்த காலங்களில், தனியாா் வியாபாரிகள் குறைந்த விலைக்குப் பருத்தியை கொள்முதல் செய்தனா். அதனால், விவசாயிகளுக்கு சாகுபடி செலவுத் தொகையை கூட திரும்பப் பெற முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் ஏலத்தில் விற்கப்படும்போது, பருத்திக்கு அதிக விலை கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் அரசு பருத்திக்கு உரிய விலை நிா்ணயித்து, நேரடியாக கொள்முதல் செய்ய முன்வந்தால், டெல்டா மாவட்டங்களில் மாற்றுப் பயிா் சாகுபடியான பருத்தி சாகுபடியில் புரட்சி ஏற்படுவது உறுதி’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT